Description
அவளின் இருப்பு – பெரும்பாலும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு வைக்கப் படுவதில்லை. பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் காற்றில் அவளுக்கும் பங்கு இருக்கிறது என்பது உணரப்படுவதில்லை. வரலாறு என்னும் “HISTORY” எப்போதும் “HIS STORY” என்று மட்டும் உருவகிக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் மீள்பார்வை செய்யவும் , அவளின் இருப்புக்குக் கட்டியம் கூறவும், வரலாறு என்பதை “HES STORY” என்றாக்கவும் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறார் கரூர் வினிதா மோகன் “பீனிக்ஸ் பெண்கள்” என்னும் படைப்பின் வாயிலாக. கீழே விழுந்தாலும், இழந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் . அதுதான் வாழ்க்கையின் அடையாளம். வாழ்தலின் அடையாளம். மூக்கு விடும் மூச்சு மட்டுமல்ல அடையாளம் என்பதை 175 பக்கங்களின் ஆயிரக் கணக்கான வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் வினிதா மோகன்.
பீனிக்ஸ் என்பது லட்சியத்தின் குறியீடு. சூரியனைத் தொட்டுவிட வேண்டும் என்பதைப் பறத்தலின் இலக்காகக் கொண்டது பீனிக்ஸ். சூரியனின் கொதிநிலை உயிரைப் பொசுக்கும் என்றாலும் சூரியனைத் தன் சிறகுகளுக்குள் பொதிந்து கொள்ள வேண்டும். சூரியனின் உச்சியில் தான் சென்று அமரவேண்டும் என்பதான இலக்குகள் கொண்ட பீனிக்ஸ் சூரிய நெருப்பில் கருகி ,உருகி ,பொசிந்து சாம்பலானாலும் – சாம்பலின் கருவறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. இது பறவையின் இயல்பும் , கதையும் மட்டுமா? பீனிக்ஸின் படிமத்தில் பெண்ணை இருத்திவைத்தால் அவளுக்கும் முற்றமுழுக்கப் பொருத்தப்பாடு கொண்டதுதானே..?
இந்த வாழ்க்கையின் உயிர்ப்பை இப்படியாக நிலைநிறுத்திக் கொண்ட இருபது பீனிக்ஸ் பெண்கள் அல்லது பெண் பீனிக்ஸ்களின் ராஜபாட்டை தான் இந்த நூல் . ராஜபாட்டை என்பதால் சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்று சிம்மாசனத்தில் உட்கார்ந்தது எப்படி என்று தேவதைக் கதையைச் சொல்லவில்லை படைப்பாளர் வினிதா மோகன். வாழ்க்கை முழுக்க முள்பாதைகள் பயணம். நிராகரிப்புகள் . மறுப்புகள் . தோல்விகள் . வழியெல்லாம் வலிகள் . முட்டுச்சந்துகள் . ஓரடி நகர்ந்தால் ,ஈரடி வழுக்கும் சேற்று நிலங்கள் . தகிப்புகள் . தவிர்ப்புகள் . துடிப்புகள் . வெடிப்புகள் . உராய்வுகள் . சிராய்ப்புகள் . குருதிகள் . காயங்கள் . பிரிவுகள் . உறவு முறிவுகள் . இவற்றால் கட்டமைக்கப்பட்ட பொழுதுகளே இந்தப் பெண்களின் வாழ்க்கை என்று பெயர் பெறுகிறது . ஆனால் ஊழையும் உப்பக்கம் காண்கிறார்கள் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்களாகி, இத்தனை நெருப்புப் பள்ளத்தாக்குகளையும் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்களாகி இத்தனை நெருப்புப் பள்ளத்தாக்குகளையும் ஒவ்வொரு நொடியாகத் தாண்டித் தாண்டி விஸ்வரூபம் எடுக்கிறார்கள். இந்த எரிமலைக் கதைகளை நெருப்பின் தகிப்பு குறையாமலும் , சாதனையின் துடிப்பு மறையாமலும் சொல்லியிருப்பது வினிதா மோகன் சாதனை.
உலகளாவிய பூகோளப்பரப்பின் பெண்களை , நம் மனசுக்கு நெருக்கமான மொழியில் சொல்லுவது படைப்பாளருக்கு வாய்த்திருப்பது – வினிதா மோகன் மொழி ஆளுமைக்குச் சான்று. நூலின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பந்தம் சுமக்கிறது. புகாரையும் , புலம்பலையும் , சோம்பலையும் பொசுக்கி எரித்து , அந்தச் சாம்பலின் பூவாகப் பெண்கள் ஆளுமைகளாக விஸ்வரூபிக்க வேண்டும் . இந்த நூலை வாசித்த யாருமே தோற்று விட முடியாது . வெற்றிக்கான மந்திரக்கோலை நூலாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
கட்டுரைகளாகப் பக்கங்களை நிரப்பாமல் , புகைப்படங்களையும் இணைத்து பெண் வரலாற்றின் பக்கங்களை நிறைவு செய்திருக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள். எழிலினி பதிப்பகம் மகளிர் எழுத்துக்கு மணிமகுடம் சூட்டுவதில் முனைந்து செயலாற்றுகிறது. அந்த மணிமகுடத்தின் நவரத்தின ஜொலிப்பு வினிதா மோகனின் பீனிக்ஸ் பெண்கள் . இன்னும் இன்னும் வெல்க..!
எப்போதும் அட்சதைகளுடன்…
ஆண்டாள் பிரியதர்ஷினி,
எழுத்தாளர்.
Reviews
There are no reviews yet.